அறிமுகம்

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை அரசகரும மொழிகளாக அமுல்படுத்தும் நோக்கத்திற்காக 1955 ஒக்டோபர் 1ஆம் திகதி அரசகரும மொழிகள் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. 1956 இல் அரசகரும மொழிகள் சட்டத்தினை அமுல்படுத்தியதன் பின்னர், அரசகரும மொழிகள் ஆணையாளரின் கீழ் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.

1987 - 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் 1988 – 16ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் அமைவாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டும் இலங்கையின் அரசகரும மொழிகளாக்கப்பட்டதோடு, ஆங்கிலம் இணைப்பு மொழியாக்கப்பட்டது. அரசியலமைப்பின் IVஆம் அத்தியாயத்தின் 18ஆம் மற்றும் 19ஆம் உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மொழிக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கும் நிறுவனமாக தற்போது அரசகரும மொழிகள் திணைக்களம் செயற்படுவதோடு, அதற்கமைய மேற்குறித்த மூன்று மொழிகளுக்குமுரிய மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்து அரசாங்கத்திற்கு வழங்கல், அரசாங்க உத்தியோகத்தர்களின் மொழித்தேர்ச்சியை விருத்தி செய்தல், கலைச்சொற்றொகுதிகளை தயாரித்தல், மொழி தொடர்பான பாடப்புத்தகங்கள் மற்றும் அகராதிகளை தொகுத்தல் முதலான பணிகள் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

இத் திணைக்களமானது பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அதிகார எல்லையின் கீழ் வருகின்றது. திணைக்களத்தின் தலைவர் அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம் ஆவார். இத்திணைக்களமானது 341/7,  கோட்டே வீதி, இராஜகிரிய எனும் இடத்தில் அமைந்துள்ளது.

நோக்கு

“அமைதியும் நல்லிணக்கமும் செழித்தோங்கும் மும்மொழிச் சமூகம்”

செயற்பணி

"சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட அரசகரும மொழிக்கொள்கையை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கலும் ஒருங்கிணைத்தலும்.”

திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் பணிகள்

  • பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2007 மற்றும் 07/2007 பிரகாரம் அரசகரும மொழித்தேர்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டிய அரச உத்தியோகத்தர்களுக்கான எழுத்து மூல மற்றும் வாய்மூல பரீட்சைகளை நடாத்தலும் சான்றிதழ்களை வழங்கலும்.
  • அரச மற்றும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களின் மொழிபெயர்ப்பு பணிகளை நிறைவேற்றல் (சிங்களம்/ஆங்கிலம்/தமிழ்)
  • பல்வேறு துறைகளுக்குரிய கலைச்சொல்லகராதிகளைத் தொகுத்தல் (சிங்களம்/ஆங்கிலம்/தமிழ்)
  • அரச உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சி பரீட்சைகளுக்கான பாடப்புத்தகங்களையும் வழிகாட்டல் நூல்களையும் தொகுத்தல்.
  • மும்மொழி அகராதிகளைத் தொகுத்தல்
  • நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொழி ஆய்வுகூடத்தில் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளையும் வேறு வெளிநாட்டு மொழிகளையும் கற்பிக்கும் வகுப்புகளையும் பரீட்சைகளையும் நடாத்துதல்.
  • வெளிவாரியான நிறுவனங்களின் பணிக் குழுவினருக்கு மொழித்தேர்ச்சிப் பரீட்சைகளையும் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைகளையும் நடாத்தல்.
  • பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிறுவனங்களிலும் மொழிபெயர்ப்பு பாடநெறிகளை பயில்வோருக்கு செயன்முறைப் பயிற்சியை வழங்கல்.