நீங்கள் இரண்டாம் மொழித்திறனைப் பெறும்பொருட்டு தமக்கு உதவுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

அரசகரும மொழித் தேர்ச்சிப் பரீட்சை என்பது யாது?

தமது தாய் மொழியைத் தவிர மற்றைய (இரண்டாம்) அரசகரும மொழியில் சேவையை வழங்குவதற்காக நபரொருவரிடம் காணப்படும் திறமையை மதிப்பிடுவதற்காக நடாத்தப்படும் எழுத்துமூல மற்றும் வாய்மூலப் பரீட்சையாகும்.

யாருக்காக?

பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம்: 03/2007, 07/2007 மற்றும் 01/2014ற்கு ஏற்ப சேவையில் ஈடுபட்டுள்ளோர் இப்பரீட்சைக்குத் தோற்றலாம்.

எவ்வாறு பரீட்சைகள் நடாத்தப்படும்?

சேவைத் தரத்திற்கு ஏற்ப I, II, III மட்டங்களின் கீழ் அல்லது I, II, III, IV மட்டங்களின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் பரீட்சை நடைபெறும். இப்பரீட்சையானது எழுத்துப்பரீட்சை, வாய்மொழிப் பரீட்சை எனும் இரு பகுதிகளைக் கொண்டது. எழுத்துப் பரீட்சையானது இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வருடமொன்றிற்கு இரு தடவைகள் நாடளாவிய ரீதியிலும் வாய்மொழிமூலப் பரீட்சையானது அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் மாகாண மட்டத்திலும் நடாத்தப்படும்.

பரீட்சைக்கு விண்ணப்பித்தல்

நீங்கள் அரசகரும மொழித்தேர்ச்சியைப் பூர்த்தி செய்ய வேண்டியவரா? அவ்வாறாயின், பூர்த்திசெய்யப்பட்ட உங்களது விண்ணப்பப் படிவங்களை, அரசகரும மொழிகள் ஆணையாளரினால் பிரசுரிக்கப்படும் அரசாங்க வர்த்தமானிக்கு அமைவாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கவும். அரசகரும மொழித்தேர்ச்சிக்கான எழுத்துப் பரீட்சைக்கு நீங்கள் அழைக்கப்படுவீர்கள்.

  • சேவைத் தரத்திற்கு ஏற்ப நீங்கள் IIIஆம் மட்டத்துக்குரியவர் எனில் எழுத்துப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 16 புள்ளிகளையும், II அல்லது Iஆம் மட்டத்துக்குரியவர் எனில் ஆகக் குறைந்தது 28 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டால் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் வாய்மூலப் பரீட்சைக்கு அழைக்கப்படுவீர்கள்.
  • பொ.நி.சுற்றறிக்கை இலக்கம் 01/2014இன் பிரகாரம் க.பொ.த.(சா.த) பரீட்சையில், இரண்டாம் மொழியில் சித்தியடைந்த உத்தியோகத்தராயின், அதற்கமைய பிரசுரிக்கப்படும் அரசாங்க வர்த்தமானி மூலம் வாய்மூலப் பரீட்சைக்கு அழைக்கப்படுவீர்கள்.
  • ஏறத்தாழ 3 வருடங்களுக்குள் எழுத்துப் பரீட்சை, வாய்மொழிப் பரீட்சை எனும் இரண்டிலும் சித்தியடைவதற்கு நீங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள்.

எவ்வாறு பெறுபேறுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்?

  • பரீட்சையின் இரு பிரிவுகளுக்கும் தோற்றியதன் பின்னர் உங்களது பெறுபேறுகள் வெளியிடப்படும்.
  • எழுத்து மூலம் மற்றும் வாய்மூலம் எனும் இரு பகுதிகளையும் நீங்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருந்தால், தொடர்ந்தும் உங்களை கௌரவப்படுத்தும் வகையில் பெறுமதிமிக்க சான்றிதழ் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் உங்களுக்கு வழங்கப்படும்.

இப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் மொழிக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியுமா?

  • நீங்கள் 2007.07.01ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்ற உத்தியோகத்தராவதோடு பொ.நி.சுற்றறிக்கை இலக்கம் 03/2007ற்கு அமைவாக பரீட்சைக்கு விண்ணப்பித்து சித்தியடைந்திருப்பின் அதில் குறிப்பிடப்பட்டவாறு ஊக்குவிப்புக் கொடுப்பனவை உங்களது நிறுவனத் தலைவர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.