இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களமும்  தமிழும் அரசகரும மொழிகளாகவும்  ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது யாதெனில் இலங்கைப் பிரசைகள் அனைவரினதும் மொழி உரிமையை பாதுகாப்பதுடன், அதற்கான சட்டச் சூழலொன்றை கட்டியெழுப்புவதுமாகும். மொழி உரிமை மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து, உயர் நீதிமன்றத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசியலமைப்பினால் இடமளிக்கப்படுவதன் மூலம், இதற்கான பின்புலம் மேலும் வலுப்படுத்தப்படுகின்றது. மேலும், 2019 ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் முதலாம் திகதி (07.01) அரசகரும மொழிகள் தினமாகவும், அத்தினத்திலிருந்து ஒரு வாரம் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது, மொழி உரிமையின் உலகலாவிய தன்மையை வலுப்படுத்துவதாகவும், பல்வகைமையூடாக ஐக்கியத்தைப் பேணும் அளப்பரிய நடவடிக்கையாகவும் சுட்டிக்காட்டுவது  பொருத்தமானதாக அமையும்.

ஓர் இராஜாங்க அமைச்சிற்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கு மட்டும் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுச் செயற்படுவதென்பது  சாத்தியமானதல்ல. இதற்காக சகல அரச நிறுவனங்களும் அதேபோன்று சகல அரச ஊழியர்களும் கைகோர்த்து செயற்பட வேண்டிய தேவை முன்னொருபோதுமில்லாதவாறு இன்று எழுந்துள்ளது. இத்திடசங்கற்பத்தை அடிப்படையாகக்கொண்டு அரச நிறுவனங்களில் மொழித் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை பிரபல்யப்படுத்தல், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கீழ் தேசிய மொழிபெயர்ப்பு நிலையத்தை நிறுவுதல், அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய  அரச உத்தியோகத்தர்களிடம் பொறுப்புகளை வழங்குதல் போன்ற பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2023 அரசகரும மொழிகள் வாரத்தை மையமாகக்கொண்டு இம்முறை அரசகரும மொழிகள் திணைக்களம் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் 2023 யூலை 06 ஆம் திகதி அரசகரும மொழிகள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை முக்கியமாகக் குறிப்பிடலாம். இதில் இடம்பெறவுள்ள முக்கிய  அங்கங்கள் வருமாறு :  

  1. “இனங்களுக்கிடையிலான நல்லுறவைப் பேணுவதற்கு மொழியை ஆக்கபூர்வமாக ஈடுபடுத்தல்” எனும் தலைப்பில் பிரதான சொற்பொழிவு இடம்பெறுதல்
  2. பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு தொடர்பான விசேட பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களை இலக்காகக்கொண்டு தொகுக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் கைந்நூலை வெளியிடுதல்
  3. மொழிபெயர்ப்புக் குழாத்திற்கு உள்வாங்குவதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல்
  4. தெரிவுசெய்யப்பட்ட சில நூலகங்களுக்கு திணைக்கள வெளியீடுகளை இலவசமாக வழங்குதல்
  5. சிங்களம் மற்றும் தமிழ் அடிப்படை மற்றும் உயர் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பாடநெறியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குதல்

அரசகரும மொழிகள் வாரம் வெற்றிகரமாக நிகழ்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் மற்றைய சகோதர இனத்தவர்களின் மதிப்பையும் மரியாதையையும் புரிந்து கொள்வதற்கு மொழியின் முக்கியத்துவத்தை மென்மேலும் புரிந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

பிரின்ஸ் சேனாதீர
அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம்